சென்னை: போதையில் போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிய 6 பேர் கைது

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மதுபோதையில் போலீஸ் ஜீப் உள்ளிட்ட ஐந்து வாகனங்களை அடித்து உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூர், ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மதுபோதையில் தாக்கியதாக அவர் காவல்துறையினரிடம் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய ஒரு நபரை காவல்துறையினர் பிடித்தபோது அவர் தப்பி ஓடியதாகத் தெரிகிறது. அந்த நபர் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு சென்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் , அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் இரண்டு ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு காரை அடித்து உடைத்துள்ளனர்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். காவல்துறையினரின் ரோந்து ஜீப்பின் கண்ணாடியையும் அந்தக்கும்பல் கல் வீசி உடைத்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தெருத் தெருவாக தேடினர். பின்னர் தலைமறைவாக இருந்த 6 பேரை கைது செய்தனர். வாகனங்களை அடித்து உடைத்தவர்களின் கைகளில் காயங்கள் இருப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

Author: sivapriya