ரவை உப்புமாவே பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு, இந்த ‘உடுப்பி ஹோட்டல் காராபாத்’ ரெசிபியை செய்து கொடுத்துப் பாருங்களேன்! அப்புறம் இட்லி தோசை வேணும்னு கேட்கவே மாட்டாங்க.

எப்போதுமே இட்லி தோசை சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான ஒரு கர்நாடகா ஸ்டைல் ரெசிபி. ரவை உப்புமாவே பிடிக்காது என்று சொல்பவர்களும் இந்த காராபாத்தினை விரும்பி சாப்பிடுவார்கள். காராபாத் ரெசிபியை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். 200 கிராம் அளவு ரவைக்கு பின் சொல்லப்படும் குறிப்புகள் சரியாக இருக்கும். முதலில் 1 கப் அளவு ரவையை வறுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 லிருந்து 4 நிமிடங்கள் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

rava-kesari3

அடுத்தபடியாக கடாயில் நெய் – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி மிகப் பொடியாக நறுக்கியது – 1/2 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10 இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 கீனியது, சேர்த்து வெங்காயம் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின்பு, பொடியாக நறுக்கிய தக்காளி மீடியம் சைஸ் – 1 சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், எது தேவையோ அதை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

karabath1

அடுத்தபடியாக 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன் அளவு, சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கி, 3 கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். ரவையை எந்த கப்பில் அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ரவையை கொட்டி கொண்டு கிளறிவிட வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை பக்குவமாக வேக வையுங்கள். தண்ணீர் முழுவதும் வற்றிய உடன், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, 1 டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் துருவல், 1 ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்துவிட்டு. ரவைக்கு மேலே ஒரு மூடியை போட்டு 5 இலிருந்து 7 நிமிடம் தீயை சிம்மில் வைத்து வேக வைத்து எடுத்தாலே போதும்.

karabath2

சுட சுட சூப்பரான காராபாத் தயாராகி இருக்கும். இதன் மேலே கொத்தமல்லி தழைகளைப் பொடியாக நறுக்கி தூவி, ஒரு தேங்காய் சட்னி அப்படி இல்லை என்றால் வெங்காய ரைத்தவுடன் பரிமாறி பாருங்கள். அட்டகாசமான சுவையில் ஒரு சிம்பிளான காராபாத் தயார். இன்னைக்கு ராத்திரி ட்ரை பண்ணி பாருங்க. முடியாதவங்க நாளைக்கு காலையில செய்ய மிஸ் பண்ணாதீங்க.

Author: admin