டெல்லி: ‘பாபா கா தாபா’ உரிமையாளர் தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் சிகிச்சை


கடந்த ஆண்டு பெரும் வைரலான, டெல்லியின் ‘பாபா கா தாபா உரிமையாளர் காந்தா பிரசாத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“பாபா கா தாபா” உரிமையாளர் காந்தா பிரசாத் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 81 வயதான அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். “வியாழக்கிழமை இரவு 11.15 மணியளவில், காந்தா பிரசாத் அங்கு அனுமதிக்கப்பட்டதாக சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்தது. போலீசார் மருத்துவமனையை அடைந்து மருத்துவ அறிக்கையை சேகரித்தனர். மது மற்றும் அதிக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதுதான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது” என துணை போலீஸ் கமிஷனர் அதுல் குமார் தாக்கூர் தெரிவித்தார்.
image
காந்தா பிரசாத்தின் மனைவி பதாமி தேவி, “அவர் என்ன சாப்பிட்டார், என்ன குடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மயக்கமடைந்த பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் எங்களிடம் எதுவும் சொல்லவில்லைன்று கூறினார்.
“பாபா கா தாபா” சாலையோர உணவகம் கடந்த ஆண்டு புகழ் பெற்றது. காந்தா பிரசாத் கண்ணீருடன் தனது நிதி சிக்கல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ பெரிய அளவில் வைரலாகியது. வயதான இந்த தம்பதியரின் வீடியோவை யூடியூபர் கவுரவ் வாசன் வெளியிட்ட பின்னர் நாடு முழுவதும் இருந்து இவர்களுக்கு நன்கொடைகள் வந்தன. அதன்பின்னர் காந்தா பிரசாத் ஒரு உணவகத்தைத் திறந்தார். ஆனால் கூட்டம் விரைவில் குறைந்து தொழில் நஷ்டம் அதிகரித்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்த உணவகத்தை மூடிவிட்டு தனது மனைவியுடன் மீண்டும் தனது சாலையோர தபாவை நடத்த ஆரம்பித்தார். இந்த சூழலில் நிதிச்சிக்கல்கள் காரணமாக காந்தா பிரசாத் தற்கொலைக்கு முயன்றார் என்று சொல்லப்படுகிறது.

Author: sivapriya